Sunday, 15 February 2015

இக்கரைக்கு அக்கரைப்பச்சை!


                என் மாணவி ஒருவளின் அம்மா ரொம்ப சின்னப்பொண்ணு.கணவனை இழந்து இன்னும் ஒருவருடம் கூட ஆகவில்லை.அந்த மாணவியின் மேல் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு காட்டுவோம்.பெற்றோரில் ஒருவர் இல்லாவிட்டாலும் அந்த மாணவர்கள் மேல் அதிகம் அன்பு காட்டுவது வழக்கம்.ஒருநாள் மாணவியின் பாட்டி வந்தார். ஒரு பாட்டிக்கான அடையாளம் எல்லாம் இருந்தது.ஆனால் நரை முடியெல்லாம் இல்லை. அழகான தோல்(முகம்).அவர் என்னிடம் பேசும் விதமும்,என் வயது ஒத்த பெண்களைப்போலவே இருந்தது.
              உடனே கேட்கவேண்டாம் என ,பாட்டியிடம் பேசிவிட்டு ,மகளுக்கு என்ன வயசு என்ன என்று தொடர்ந்தேன். பாட்டியும் சொல்லிவிட்டு, ’அவ வாழ்க்கைதான் இப்படி பாதியிலே போச்சு டீச்சர்,என்ன பாவம் செய்தோமோ? மாரடைப்பால் இறந்துட்டாரு மருமகன் ‘என்று கண்கலங்கினார்.’எல்லாம் ஏதோ காரணத்துக்காகத்தான் ,பேத்தி உங்களுடன் இருப்பது மகிழ்ச்சிதானே?பின்னே என்ன அழுகை?விடுங்க ,வந்த இடத்துக்குத்தானே போயிட்டார்.அவருக்கு சீக்கிரம் அழைப்பு வந்திருச்சி ,நாம் கொஞ்சம் லேட்டா போகப்போகிறோம்’என்று கொஞ்சம் ஆறுதல் சொல்ல, மறுபடியும் தமாசாக பேசினார்.சரி உங்க வயது என்ன இருக்கும்? என்றேன் (கொஞ்சம் பயத்துடன்).

              ’நீங்களே சொல்லுங்கள்’என்றார்.நான் கூட்டி சொன்னால் அப்புறம் வருத்தப்படக்கூடாது ‘என்று சிரித்தேன்.சரி நானே சொல்கிறேன் ‘என்று கைவிரலில் சைகையாய் காட்டினார்!ஆ!அதிர்ந்து போனேன்,என்ன என் வயசா?’ஐயோ! பேரப்பிள்ளை எடுத்திட்டிங்களா? சிவசிவா...நான் இன்னும் என் புள்ளையைப் பள்ளிக்கூடத்தில போய் விட்டுட்டு வரேன்,நீங்கள் கல்யாணம் பண்ணிக்கொடுத்து பேரப்பிள்ளையா?எனக்கு இன்னும் ஆச்சரியமும் வியப்பும்.இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை இருந்தாலும் ஏனோ எனக்கு கொஞ்சம் பொறாமை கலந்த வியப்பு!’போங்க டீச்சர் 18 வயசுல,என் அப்பா கல்யாணம் பண்ணிவச்சிட்டாரு,அப்புறம் என்ன , உடனே பிள்ளைகளைப்பெற்றுக்கொண்டேன்,நீங்கள் கண்டிப்பா லேட் கல்யாணம்தனே?என்று மிகச்சரியாக  சந்தேகத்துடன் கேட்டார்.

                    ஆமாம், நான் 28 வயசுல திருமணம் செய்தேன் !அதான் இன்னும் பிள்ளை பள்ளிக்கூடம் போகுது’என்று பெருமூச்சு விட்டேன்.’உங்களைப்பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு சிஸ்டர் ‘என்றேன்.’ஏன்லா?என்று என்னைப்போலவே அவரும் காமெடியா கேட்டார்.இல்லை,நீங்கள் பெரிய கடமையெல்லாம் முடிச்சிட்டிங்க ,நான் இன்னும் ,அவ பள்ளிக்கூடம் முடிச்சி , காலேஜ் அனுப்பி ,அப்புறம் கல்யாணம் பண்ணிக்கொடுக்கனும்,அதுக்கு இன்னும் 10 வருசம் ஆகுமே?என்று இன்னும்ம் வேகமாய் மனதில் கிடந்த பொறுப்பை நீளமாய் சொன்னேன்.அட போங்க டீச்சர், அதெல்லாம் இறைவன் சரியா செய்து கொடுப்பான் . 18 வயசில் திருமணம் செய்து என்னத்த நாங்க அனுபவிச்சோம்? குடும்பம் ,பிள்ளைகள் என செட்டல் ஆகிட்டோம்,நீங்கள் நிறைய அனுபவிச்சிருப்பிங்களே?என அவர் சோகமாய் கேட்டார்.

               அதென்னவோ உண்மைதான் ,22 வயசுல வெளிநாடு போக ஆரம்பிச்சேன். கார் ஓட்டிப்பழகினேன்.அப்பா அம்மாவுக்கு நிறைய உழைச்சிக்கொடுத்தேன்.திருமணத்துக்கு நாங்களே பணம் சேமிச்சி அம்மாவின் பாரத்தைக் குறைச்சோம். காதல் மட்டும் பண்ணல அந்த வயசில்,மத்தபடி  நினைச்சபடி ஊர் சுற்றினோம், ஆரோக்கியமான நண்பர்களை சேர்த்துக்கொண்டோம் அண்ணா தம்பிகள் மற்றும் நண்பர்களோடு கும்மியடிச்சோம் ’என கொஞ்ச நேரம் அந்த நாட்களுக்கு போய்விட்டேன்!இதையெல்லாம் கேட்ட அந்த இளமை பாட்டி ‘இப்போ எனக்கு உங்களைப்பார்த்தால் பொறாமையா இருக்கு டீச்சர்.இன்னும் சின்னப்பிள்ளைபோல(?????) முடியை கிராப் வெட்டிக்கிட்டு, கார் ஓட்டிக்கிட்டு,இப்படி தினமும் குழைந்தைகளோடு சிரிச்சிக்கிட்டு எந்த கவலையும் இல்லாமல் வாழ்க்கையை ஓட்றிங்களே?இதைவிட வேற என்ன வேண்டும்?’என்றார்.எங்களுடைய கடமைகளை நினைத்துப்பாருங்கள்!’

                  ’சத்தியமா சொல்கிறேன் ,பொறுப்புகள் உள்ள மனிதன் தான் நிஜமாகவே பாவம் ,எதையும் நிறைவேற்றாமல் போய்விடுவோமோ?என்ற பயம் இருக்குப்பா’இது என் கருத்து.’ச்சே! அப்படியெல்லாம் சொல்லாதிங்க டீச்சர்,உங்களைப்பத்தி என் பேத்தி ரொம்பவே சொல்லுவாள்,திருக்குறள் ,தேவாரம் , பாட்டு ,கதை என எவ்வளவோ சொல்லிக்கொடுத்து,அவ அப்பா நினைவுகளைக்கூட மறக்கும்படி செய்திட்டிங்க ,இதுவே பெரிய விசயமாச்சே?என்றார். என்னவோ இது கேட்க நல்லா இருந்தாலும் ,இன்னும் என் கடமைகளை முடிக்க குறைந்த பட்சம் 5 வருசமாவது ஆகுமே? அதுவரை நான் பிறவிப்பெருங்கடலில் நீந்த வேண்டுமே?’சரி டீச்சர் எங்களுக்கு சொந்த தோட்டம் இருக்கு ,அதில் கத்தரிக்காய்,வாழைக்காய் ,வெண்டைக்காய் எல்லாம் நிறைய கிடைக்கும் ,உங்களுக்கு கொடுத்தால் எடுத்துக்கொள்வீர்களா?என்று பாட்டி தயக்கத்துடன் கேட்டார்.

                   ’அட சமைச்சி கொடுத்திங்களா, இன்னும் சந்தோசமாய் எடுத்துக்கொள்வோம்’என்றேன்.அப்பாடா! எங்கேடா முகத்தில் அறைஞ்சதுபோல வேண்டாம் என சொல்லிடுவிங்களோ என பயமா இருந்துச்சி டீச்சர் ,ஏன்னா என் மகளிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னேன்,அதுக்கு அவ சொன்னாள்’அம்மா அவுங்களைப்பார்க்க ரொம்ப நல்லவங்களா இருந்தாலும் ,என்னம்மோ கேசுவலா பேச பயமா இருக்கும்மா’என்றாள். அதான் நானே வந்து கேட்கிறேன்,நாளை முதல் கொடுத்துவிடுகிறேன் ;என்று விடைபெற்றார்.

                  என்னையே வெறிச்சிப்பார்த்துக்கொண்டிருந்த என் சக ஆசிரியை சொன்னாள்,’இதுதான் இக்கரைக்கு அக்கரைப்பச்சை டீச்சர்.உங்களுக்கு கிடைச்ச வெளியூர் பயணம், நண்பர்கள் கூட்டம்  எல்லாம்  அவங்களுக்கு கிடைக்கவில்லை,அவுங்களுக்கு சீக்கிரமே கிடைச்சது உங்களுக்கு கொஞ்சம் லேட்டா கிடைக்கும்’அவ்வளவுதான் ,ஆனாலும் நீங்கள் இன்னும் மெட்சுவர்ட்டா இல்லை,அந்த பாட்டியோடு ஒப்பிடுகையில் என்பதுதான்  உண்மை டீச்சர்’என்றாள்.என்ன சொன்னாலும்  எனக்கு பாட்டிமேல் பொறாமைதான்!

3 comments:

 1. எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்னும்போது,கவலைப்பட எதுவுமில்லை!

  ReplyDelete
 2. எல்லாம் விதிப்படிதான்...

  ReplyDelete
 3. இக்கரைக்கு அக்கரை பச்சை....

  சரியாத் தான் சொல்லி இருக்காங்க பெரியவங்க!

  ReplyDelete