Sunday 25 August 2019

ஞாயிற்றுக்கிழமை என்றாலே!

                                                                                     
                காலையில் அம்மாவின் திட்டும் குரல்.'சீக்கிரமா எழுந்து வேலைகளை முடிச்சிட்டு அப்புறம் மதியம் ஓய்வெடுக்க வேண்டித்தானே?அப்படி என்ன எழவு தூக்கம் வருமோ உங்களுக்கு?'இன்னிக்காச்சும் நிம்மதியா தூங்க விடுங்கம்மா!இது எங்களின் சோகக்குரல்.காலைப்பசியாறை தயார் செய்யும்   சத்தம் காதில் விழும் வரை சத்தமாய் செய்வார்கள் அம்மா.அப்போதாவது நாங்கள் எழுந்து வெளியே வருவோம்  என்ற எதிர்பார்ப்பில்!

        எழுந்திரிக்க தாமதம் ஆனால் ,அம்மாவே கோபத்தில் 'சரக்..சரக் .'என்று துணி துவைக்கும் சத்தம் !இனியும் தூங்கமுடியுமா?எழுந்தவுடன் நேராய் ,டாய்லெட்டில் தான் முழிக்கவேண்டும்.அதுக்கு முன் ,இப்போவெல்லாம் போனை நோண்டுவதுபோல,அப்போவெல்லாம் ரேடியோவை நோண்டி ,வேண்டிய சேனலை  வைத்துவிட்டு, இசையோடுதான் வேலைத் தொடங்கும்.அடிவிழும்போது பக்கத்துவீட்டில் கேட்காமல் இருக்க இதுவும் ஒருவகை யுக்தி!மானப்பிரச்சனையாச்சே!

         குடும்பத்தில் உள்ள அக்கா தங்கச்சிகளோடு ஏட்டா போட்டி .துணி துவைத்தல்,வீடு பெருக்கல்,படுக்கையைச் சுத்தம் செய்தல்,பாத்திரம் கழுவுதல் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.'நான் போனவாரம் துணி துவைச்சேன்,இந்த வாரம் நீ செய்.நான் உன் வேலையைச் செய்யறேன் .'ஓ !வாராவாரம் நானேதான் இந்த வீட்டில் செஞ்சி தொலையணும் ?இப்படியே  எங்கள் பொழுது புலரும்.தேவை ஏற்பட்டால் துடைப்பம்,ஆப்பக்கரண்டி மற்றும் சில ஆயுதங்களை அம்மா கையாண்டு எங்கள் போரை ஒரு முடிவுக்கு கொண்டுவருவார்!வீட்டில் உள்ள அத்தனை கிடாக்களின்(உடன்பிறப்புகள்,மாமா பையன்,சித்தப்பா பையன்)  சப்பாத்துகளையும் துவைச்சி சாகணும்!நான் தான் அதுக்குப்பொறுப்பு....பருப்பு!

         பிறகுதான் குளியல்,வழிபாடு அப்புறமாத்தான் பசியாற முடியும்.அதிலும் வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகள் உண்ட பிறகுதான் மிச்சம் நமக்கு!அதையெல்லாம் வெற்றிகரமாய் பதுக்கி வைப்பதில் அம்மா தீவிரவாதி!மதியம் ஆகிடும்!சமையலுக்கு ரெடி பண்ணவேண்டும்.அம்மா சமைப்பார்.சுவையான நிம்மதியான சாப்பாடுதான் !கண்டிப்பாக கோழிக்குழம்பு,மீன் குழம்பு,ஒரு வகை கீரை பிரட்டல்.(ஞாயிற்றுக்கிழமை மெனு).நாங்கள் சமைக்கத் தொடங்கும் வரை ,அம்மாவின் சமையால்தான் ருசியும்..சுவையும்!

          சாப்பிட்டவுடன் ,அங்கே நமக்காக காய்ந்து போய் கிடைக்கும் எச்சில் பாத்திரங்கள்!அடுத்து அதைக் கழுவிப்போட ஒரு சண்டை!அம்மா நல்ல மூட்டில் இருந்தால் ,மாலை ஏதாச்சும் பலகாரங்கள் மற்றும் தேநீர்!மாலையில் மீண்டும் துணி மடிக்கவேண்டும் ,சமையல்களை சூடு பண்ணி வைக்கவேண்டும்!அக்காக்கள் வேலைக்குப்போவதால் ,அவர்கள் தோழிகளைச் சந்திக்கபோறேன் அல்லது மாப்பிள்ளையுடன் சந்திப்பு என கிளம்பிவிடுவார்கள்.நானும் தங்கையும் பாதிக்கப்படட சங்க உறுப்பினர்கள்!

          இரவாகி விடும் .எல்லோருடைய உடைகளையும் ஐயன் பண்ணி மீண்டும் செத்து செத்துபிழைக்கவேண்டும்!பள்ளிக்குப்போகும் வரை ,வீட்டுப்பாடங்கள் என நாளைய வேலைகள் தயாராகும்.வேலைக்குச் சென்றபின்பு ,ஒரே ஒரு மாற்றம் வந்தது! அதாவது ஹொம்வேர்க் செய்யவேண்டியதில்லை.மற்ற எல்லாமே செய்தாகவேண்டும்.இரவு வானொலியில் ஒலியேறும் பழையபாடல்கள் , ஒருபக்கம் சோகமாய் கேட்கும்.காரணம் மீண்டும் நாளைக்கு சீக்கிரம் எழவேண்டுமே!
(இவையாவும் திருமணத்துக்கு முன்!)

       ஆனால் இப்போ மேற்கூறிய அனைத்தையும் நானே செய்யவேண்டிய கட்டாயம்!  ஒரே ஒரு சுதந்திரம்...என் வீடு..என் விருப்பம் .எப்போ செய்யத்தோணுதோ (சிலவேலைகளை )அப்போ செய்வேன்.எனக்கு யாரும் கட்டளையிட முடியாது!                         
                                                                       

ஆனால் சத்தியம் பண்ணிச் சொல்கிறேன்.தி.முவில் விருப்புவெறுப்பு  அதிகம் என்றாலும் அதுதான்  தான் அழகிய அனுபவங்கள்!(எனக்கு மட்டும்தானா?) 

1 comment:

  1. இனிய அனுபவங்கள்.... முன்னர் வேலை இப்போது பொறுப்பு.

    ReplyDelete