Tuesday, 18 March 2014

இது சாபமா?அல்லது இயற்கை சீற்றமா?

              சுவர்ண பூமி! மலேசிய திருநாடு !வந்தாரை வாழவைக்கும் பசுமை நாடு!அதுதான் எங்கள் மலேசிய திருநாடு!உலக கரைவரைப்படத்தில் பிறநாடுகளோடு , எங்களை ஒப்பிட்டால் நாங்கள் ஒரு புள்ளியே!’திரைக்கடல் ஓடியும்  திரவியம் தேடு ’என்று தமிழ் மொழியில் மட்டும்தான் சொல்லிவைத்தார்களா அல்லது வேற்றுமொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளனரா ?என்று கேட்கும் அளவுக்கு வெளிநாட்டினர் இங்கே பஞ்சம் பொழைக்க வந்துவிட்டனர். இந்தோனேசியர்,வங்காளதேசி,பாகிஸ்தானி, நேப்பாளி ,தாயிஸ் , தமிழ்நாட்டினர்,பர்மா,மியான்மார்,வியட்நாமி  என்று பல நாட்டினர் முகாம் போட்டிருக்கும் நாடுதான் எங்கள் மலாயா திருநாடு! வேற்று நாட்டினர்களின் வருகையாலோ என்னவோ?இன வாரியாக  மூன்றாம் நிலையில் இருந்த தமிழர்கள் தற்போது நான்காம் நிலைக்கு தள்ளப்பட்ட  அவலமும் எங்கள் சொந்த ஊரில்  !
                 அந்த சுவர்ணபூமிக்குத்தான் தற்பொழுது கட்டம் சரியில்லைப்போலும்.ஏழரைச் சனியா?அல்லது அஷ்டம சனியா? எவராலும் கணிக்க முடியவில்லை.கடந்த சில மாதங்களாக மலேசிய நாட்டைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கும் சில நெருக்கடிகள் அல்லது (எமகண்டம் என்றும் போட்டுக்கொள்ளலாம்) டெங்கி காய்ச்சல், அளவுக்கு அதிகமான வெயில்,தண்ணீர் பற்றாக்குறை,மோசமான புகைமூட்டம் , தற்போதைய(ஆனால் இறுதியாக என்றும் சொல்லிவிட முடியாது) மாயமாய் மறைந்த மாஸ் விமானம்!
              அப்பப்பா! சுகாதார அமைச்சர் தொடங்கி சுற்றுச்சூழல் அமைச்சர் என்று இறுதியாக பிரதமர் மற்றும் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் வரை ,அனைவரின்  தூக்கத்தையும்  விலைக்கு வாங்கிச் சென்ற அந்த நெருக்கடிகள் எங்கள் நாட்டுக்கு சாபமா?அல்லது இயற்கைத் தாயின் சீற்றமா? கடந்த ஆண்டுகளை விட மூன்று மடங்கு அதிகரித்த டெங்கி காய்ச்சல்! இந்த முறை டெங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பலரை இறப்பு விழுங்கிச் சென்றதுதான் வருத்தமான செய்தி.அதிக வெப்பம் காரணமாக கொசுக்கள் அதிகரித்தன,அதுவே டெங்கி நோய்க்கு வாசலாக அமைந்தன!
              பள்ளி ,அண்டைவீட்டார், உறவுகள் ,அறிமுகமானவர்கள் என்று யாரைக்கேட்டாலும் ,’டெங்கி சஸ்பெக்ட்’ மருத்துவமனையில் இருந்தேன்’! இது என்னம்மோ சந்தைக்குப்போய் வருவது போல  சர்வசாதரணமான பேச்சாக ஆகிப்போனது. டெங்கி காய்ச்சலில்  இறந்துபோன ,என் மகளின் சக வகுப்புத் தோழியின் தாயின் மரணம்பற்றிக்கூட  முகநூலில் பகிர்ந்திருக்கிறேன். டெங்கி மரண ஓலங்கள் ஓய்வதற்குள் , நீர் பற்றாக்குறை!அதிக வெயில் காரணமாக நீர் வறட்சி கண்டதும் இந்த சுவர்ண பூமியில்தான். அங்கும் இங்குமாக நீர் பங்கீட்டு முறையில் ஆங்காங்கே நீர் தட்டுப்பாடு செய்து ,அனைவருக்கு நீர் கிடைக்குமாறு பிரச்சைனையைக் களைந்தனர்.சிலவேளைகளில் செயற்கை மழையைப் பெய்யச் செய்வர்.
                   ஒருவழியாக அந்த பிரச்சனைக்கு ‘பைபை’ சொல்லி விடைகொடுக்கும்போது மோசமான புகை மூட்டம் நாட்டையே உலுக்கி கொண்டிருக்கிறது.அதிக வெப்பம் காரணமாக காடுகள் தானாக தீப்பிடித்து எரிந்தன.ஓர் ஆன்மீகவாதியும் ,நண்பருமான ஒருவர் தன் அனுபவத்தைக் கூறினார்.’சென்ற வாரம் ஜோகூர் மாநிலம் போனபோது என் 50 வயதில் இதுவரை நான் பார்க்காத ஒரு சம்பவம்மா அது!ஆம்,நெடுஞ்சாலையில் என் வலது மற்றும் இடப்பக்கம் காட்டுத்தீ பற்றிக்கொண்டு எரிந்தது.என் வாழ்க்கையில் அப்படி நான் பார்த்ததே இல்லை.இது யாருடைய வயித்தெரிச்சலோ?காட்டுக்குள் அப்படி  ஒரு காட்டம் செல்விம்மா’என்றார்.மோசமான புகைமூட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம்!சென்ற ஆண்டு API (AIR POLLUTION INDEX) 200-ஐத் தாண்டிய போது, சில மாநிலங்களில் ,மக்கள் சுவாசக்கோளாறு நோயில் பாதிப்பதைத் தவிர்க்க ஊரடங்கு  சட்டம் அமலாக்கப்பட்டது!. எந்த கேள்விகளும் அல்லாமலே பள்ளிகள் மூடப்பட்டன. .ஆனால் இந்த வருடம் API (AIR POLLUTION INDEX) 300-ஐத் தாண்டியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கமுடியாமல்  , திணறிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள்.ஆமாம்  அதற்குள் மாஸ் விமானம் மாயமாய் மறைந்தது.
                  மற்ற நெருக்கடிகளில் நாம் மூக்கை நுழைத்து ஆருடங்கள் கூறினாலும் விமானம் மாயமான விசயத்தில் எதையும் கணிக்க இயலவில்லை. அது விபத்தா, பிணைநாடகமா? கடத்தலா?அல்லது அரசியல் நாடகமா? ஏனோ எம் நாட்டிற்கு இப்படி ஒரு சத்திய சோதனை?1993-இல்  வேலை நிமித்தம் ஜப்பான் நாடு சென்றபோது ‘ஒரு ஜப்பானியர் என்னிடம் கேட்ட கேள்வி ,தூக்குமாட்டிக்கொள்வது போல இருந்தது?’நீ எந்த நாடு ?’என்றார். நானும் பந்தாவாக ’மலேசியா’என்றேன்.அதற்கு அவர் அறைகுறை ஆங்கிலத்தில் ஒரு மரத்தைக்காட்டி மலேசியாவில் எல்லோரும் மரத்தில் வீடு கட்டிதானே வாழ்ந்தார்கள்?”என்றார்.எங்கள் நாட்டின் வளர்ச்சி அவருக்கு தெரியவில்லையா?அல்லது நாங்கள் புகழ் அடைந்து வருவது அவருக்கு பொறாமையா? எனக்குள் எழுந்த கேள்வி.இதை என் மேலாளரிடம் கூறி குறைப்பட்டுக்கொண்டபோது .அவர் கூறியதாவது ‘ஆம் செல்வி,நம் நாடு இன்னும் இவனுங்க நாட்டைப்போல வளர்ச்சியடையவில்லை, அதான் மரத்தில் தொங்கிகிடக்கிறீங்களான்னு கேட்கிறான்,விட்டுத் தொலைங்க,ஒருநாளைக்கு உலகமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு மலேசியாவை எல்லோரும் திரும்பி பார்ப்பார்கள்’என்றார்.
                    தற்போதைய விமானம் காணாமற் போன விசயத்தில் உலகமே எங்களைத் திரும்பி மட்டும் பார்க்கவில்லை,திருப்பி திருப்பி பார்ப்பதுதான் மிகுந்த வேதனையாய் இருக்கிறது.ஆம்,சில சொந்த விசயங்களுக்காக சிலரை வெறுத்தாலும் ,உலக நெருக்கடியில் சிக்குண்டு கிடக்கும் ,எங்கள் ஊர் அமைச்சர்கள் மேல் இனம் புரியாத பரிதாபம்  இருக்கவே செய்கிறது என்பதுதான் உண்மையும் கூட.இன்னும் என்னவெல்லாம் நாங்கள் அனுபவிக்கப்போகிறோம்? என்ன சாபம் ? யாருடைய கோபம்?அல்லது உலக அழிவுக்கு முதல் அறிகுறிகள் யாவும் எமது சுவர்ணபூமியில் இருந்து வெளிப்படுகிறதா?
                   ”விடியலை நோக்கி   நாங்களும் எங்கள் சுவர்ணபூமியும்”

6 comments:

 1. எங்க ஊர விடவா டீச்சர், 30 வருஷம் அனுபவிச்சோம்

  ReplyDelete
  Replies
  1. அது உண்மைதான் ,பிறநாட்டோடு ஒப்பிட்டால் ,இது நத்திங்தான்!

   Delete
 2. காட்டில் ரோடு மீது போகும்போது இரண்டு பக்கமும் மரங்கள் எரிந்தால்....மயங்கி விழாம அவர் தப்பிச்சதே பெரிய விஷயம்தான் !

  திரும்ப திரும்ப என்ன திருப்பி திருப்பி என்ன மலேசியா உளவு அமைப்பை எதைக் கொண்டு சாத்தலாம்ன்னு நீங்களே சொல்லுங்க ?

  புலிகளின் கேபி என்பவரை இலங்கை விமானத்தில் சுயமாக கடத்திவர உதவி செய்தவர்கள்தானே மலேசிய உளவு அமைப்பினர் ?

  ReplyDelete
  Replies
  1. என்ன மனோ ? பழி வாங்கறமாதிரி இருக்கே?

   Delete
 3. உள்ளக்குமுறலின்...உண்மை புரிகிறது...இதுவும் கடந்து போகும்...

  ReplyDelete
  Replies
  1. நாட்கள் ஆக ஆக ,வேதனை அதிகரிக்கிறது,நம்பிக்கை குறைகிறது!

   Delete