Sunday 14 September 2014

மனிதனும் தெய்வமாகலாம்!

                                                             

             மலாயா,பர்மா,சயாம் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு அதிகம்.அதிலும் மலாயாவில் ’சாலை ஓரங்களில் கொட்டிக்கிடக்கும் சக்கரையில் உட்காரும் காக்கைகளையும் குருவிகளையும் விரட்டும் வேலை கூட உண்டு.யாரெல்லாம் போகப்போறிங்கள், எங்களோடு வரவும்’என்ற சிலரின் ஆசைவார்த்தைகளை கேட்டுக்கொண்டு நிலப்பட்டாக்களை,நகைகளை  விற்றும் ,அடகு வைத்தும் தங்களின் தாய்நாடான இந்தியாவை விட்டு ,வெளியேறி வந்து ,இங்கே வந்து ரயில் தண்டவாளங்கள் போடவும் ,ரப்பர் தோட்டத்தில் பால் மரம் சீவுவதற்கும் கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்ட கோடான கோடி தமிழர்கள்.

             தாய்நாட்டை விட்டு வந்த அவர்களை  ,சில தரப்பினர்  '3T'அடிப்படையில் tamil school,temple,toddyshop  என  மயக்கி ஏமாற்றி வேலை வாங்கியதாக என் தாத்தா கூறி கேட்டதுண்டு.அப்படியெல்லாம் ஆசை வார்த்தைகளை கேட்டு வந்த எத்தனைபேர் மறுபடியும் தாய்நாட்டுக்குச் சென்றனர்? அந்த காலங்களில் உண்மையாகவே பணக்காரகள் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வான் ஊர்தியில் செல்லமுடியும் என நினைக்கிறேன்.இந்தியா போவது என்பது யூகிக்கமுடியாத ஒரு நிலையாக ஒருகாலகட்டம் வரையில் இருந்துவந்தது..

               யார்  இந்த நாட்டுக்குச் சொந்தக்காரன்?யார் முதலில் வந்தனர்? இந்நாடு யாருக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் யார் ?சாரி ’எந்த’ மதத்தினர் அதிகமாக இருக்கின்றனரோ அவர்களே நாட்டின்  உரிமையாளர்கள்!பெரிய எதிர்ப்பார்ப்பில் இங்கே புலம்பெயர்ந்த  பலருக்கு இன்னமும் ஏமாற்றமே மிஞ்சியது. திரும்பி போகமுடியாமல் எத்தனையோ பேர் இங்கேயே தஞ்சம் புகுந்தனர்.வசதியுள்ளவர்கள் வான் ஊர்தியிலும் ,மற்றவர்கள் வ.உ.சி கப்பலிலும் செல்வதுண்டு. குடும்பத்தையும் தங்களது வீடுகளையும்  விட்டு எத்தனைப்பேர்களால் மீண்டும் அங்கே போக முடியாமல் போனது?சொந்த நாட்டை விட்டு வந்து ஊரான் நாட்டில் பத்தோடு பதினொன்றாக வாழ்ந்து வரும் கொடுமை இருக்கே?ஆனால் அதை விட கொடுமை ,இறுதி மூச்சுவரை தங்கள் தாய்நாட்டுக்கு போகமுடியாமல் போனதுதான்!

                பெற்ற தாய்தந்தையருக்கு கொள்ளி வைக்ககூட முடியாத நிலை,காரணம் பணத்தட்டுப்பாடு.ஊரிலிருந்து கடிதம் வந்தால் ,ஏதோ அவர் குடும்பமே வந்ததுபோல என் தாத்தாவும் அப்பாவும் குதூகலித்த நாட்களைக் கண்டதுண்டு. எப்படியும் என் ப்ரோவிடெண்ட் பணத்தை எடுத்து நான் இந்தியா போவென் ,நான் பிறந்த வீட்டைப் போய் பார்ப்பேன்’என்று ஆசை ஆசையாய் இருந்த என் தந்தையினால் கூட அந்தகால கட்டத்தில் (90களில்) போகமுடியாமல் போனது.காரணம் அன்றைய காலகட்டத்தில் விமான டிக்கெட்டின் விலை.ஒரே ஒரு கப்பல் போய்க்கொண்டிருந்தது ஆனால் அதையும் வியாபார தந்திரத்தால் எரித்துவிட்டதாக கேள்விப்பட்டதுண்டு.

           ஆனால் இன்று நினைத்தவர்கள் எல்லாம் தமிழ்நாடு போகலாம்,குடும்பம் குடும்பமாக போகலாம்.ஒரு வருடத்தில் பலமுறை போகலாம்.அட ஏன் அவ்வளவு தூரம் பேசனும்?நானே இதுவரையில் ஒன்பது முறை தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டேன்.இத்தனைக்கும் சேமிப்பு என்ற ‘கெட்டப்பழக்கமே’என்னிடம் இல்லை.ஆனால் உடனடியாக ஒரு தொகையைச் செலுத்தில் என்னாலும் போக முடிகிறது.அதெற்கெல்லாம் காரணம் ஏர் ஆசியாவின்  திரு.டோனி பெர்னாண்டஸ் என்ற நல்ல மனிதன்!அதிலும் அவர் ஓர் இந்தியர் என்பதில்தான் எத்தனை எத்தனை பெருமை?எங்களைப்போன்ற நடுத்தர மக்களின் மனதில் கோட்டையாய் உட்கார்த்திருக்கும் தன்னலமற்ற மனிதர்!

             ஆமாம் தன் வியாபாரத்தில் ஆரம்பகாலத்தில் பல மில்லியன்களை இழைந்தவர் ஆனாலும் தன் அதீத திறமையாலும் நல்ல மனதினாலும் விட்ட இடத்தைப் பிடித்த மாமனிதர்.அண்மையில் செவிவழி கேட்ட ஒரு விசயம்.விமானத்தை விட்டு இறங்கி தமிழ்நாட்டு மண்ணை மிதித்ததும் ஒரு மூதாட்டி ‘அப்பா டோனி தம்பி,நீ எங்கேடா இருக்கே? நான் சாவதற்குள்  என் தாய்மண்ணை மிதிச்சிட்டேன் .இனி என் உயிர் இங்கே போனாலும் என் கட்டை நல்லபடி வேகும் உனக்கு என் கையால ஒரு மாலை போடணும் ‘என கண்ணீர் மல்க கதறியதாக ஒரு சம்பவம் !

             ’தமிழ்நாடா? அதுக்கெல்லாம் கொடுப்பினை இருக்கணுமே’என்று பெருமூச்சு விட்ட எத்தனை லட்சம் மக்கள் இன்று அவர் தயவால் போய்வந்தனர். அட நான் கூட ஒருமுறை வெறும் ஐம்பது வெள்ளி டிக்கெட் விலையில் போனதுண்டு.ஆனால் என்ன என் அப்பாவை எங்களால் இறுதி வரை அனுப்பமுடியாமல் போனதே என்ற கவலை மட்டும் இன்னும் மனதை உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு பல லட்சோப லட்ச மக்களின் மனதில் நடமாடும் தெய்வம் என போற்றப்படும் டோனி பெர்னாண்டஸ் அவர்களே,நீர் நீடுழி வாழ்க.மனிதனும் தெய்வமாகலாம் என நிரூபித்துக்காட்டியர் .
                                                                             

4 comments:

  1. அந்த நல்ல மனிதரை வாழ்த்துவோம்...

    ReplyDelete
  2. அற்புதமான ஒரு மனிதரின் அறிமுகம் சகோதரி...
    புலம் பெயர்ந்து அயல் நாடுகளில் வசிக்கும் எம்மைப் போன்றவர்களின்
    எண்ணங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது
    முதல் சில வாக்கியங்கள்.
    ஏர் ஏசியா தெற்காசிய நாடுகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்...
    அப்படி ஒன்றை நமக்களித்த இந்த மனிதரை கொண்டாட வேண்டும்...
    எம்மைப் போல அரபு நாடுகளிலும் ஏனைய மத்திய கிழக்கு
    நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இன்னும் சில வானவூர்திகள் உள்ளன...
    எம்மையும் எம் வருமானத்திற்கு ஏற்றபடி அயல்நாடுகளுக்கு
    பயணிக்கச் செய்யும் இத்தகைய மனிதர்களுக்கு
    சிரம் தாழ்ந்த நன்றிகள்...

    ReplyDelete
  3. நல்ல மனம் கொண்ட மனிதர் வாழ்க... அவருக்கு எங்கள் பாராட்டுகளும். இந்தியாவிலும் Air Asia விமான சேவையை துவங்க இருப்பதாக செய்திகள் வந்த வணணம் இருக்கிறது.

    ReplyDelete
  4. மிக சிறப்பான மனிதரை அறிந்துகொள்ள வைத்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete