Wednesday, 25 January 2017

'சிவனருள்' சைவ சமய மாத இதழ் ஓர் அறிமுகம்!                                                                         இதழ் 
(வாசகர்களின் கருத்து )

கடந்த ஒரு வருட காலமாக சிவனருள் இதழை வாசிக்க அடியேனுக்கு, அவன் அருளால் வாய்ப்பு கிட்டியது.சைவ சமயத்தை அத்துணை எளிதாக வேறெங்கும் காணமுடியாத அளவுக்கு இந்த இதழில் எளிமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சைவ சமயத்தில் எழும் அனைத்து ஐயங்களுக்கும் இங்கே பதில் கிடைக்கும்.அடியேனின் பல ஐயங்களுக்கு இங்கே விடை கிடைத்துள்ளன .

சைவ சமயத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்துகொண்டு அனைத்து வயதினருக்கும் போதிக்க சிவனருள் அருமையான கையேடு.சிந்தாந்த வகுப்புகளுக்கு வர வாய்ப்பில்லாதவர்கள் இந்த இதழை தொடந்து வாசித்து வந்தால் ,கண்டிப்பாக அவர்கள் தங்களுக்குள் ஒரு மாற்றத்தைக் காணலாம்.அந்த உண்மையை என் குடும்ப உறுப்பினர்களிடம் அடியேன் கண்டபடியால் ,அதை இங்கே அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன்.

குருமாரர்கள் யார்?அவர்கள் எத்தகையவர்களா இருத்தல் வேண்டும் என்று பல நாட்கள் என்னுள் சில வினாக்கள் புதைந்து கிடந்தன.அதற்கான பதில்கள் மிகவும் தெளிவாக இங்கே கூறப்பட்டிருந்தது.

சைவ சமயமும் ,வழிபாடு மட்டுமே என்று கிடந்த நிலையில்,அதன் வரலாற்றைப் பைய பைய அறிந்துகொள்ளும் வாய்ப்பும் இந்த இதழின் வழி கிடைக்கப் பெற்றேன் .274 பாடல் பெற்ற தலங்களின் வரலாறும் அதில் கூத்தபிரான் நடத்திய அற்புதங்களை பல நூல்களில் படித்து தெரிந்துகொண்டேன் ஆனால் அதற்கு மாறாக அந்த சிறப்பு வாய்ந்த தலங்களில் தற்போது நடந்து வரும் அவலங்களையும் ஐயப்பாடின்றி இந்த இதழின் வழி தெரிந்துகொள்ளமுடிகிறது.

தமிழ் நாட்டுக்குச் சுற்றுலா போகிறோம் ,பாடல் பெற்ற தலங்களைப் பார்க்கப்போகிறோம் என்ற நிலை மாறி ,அத்தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கவேண்டிய சிவலிங்கத்தை புறம்தள்ளி ,அவர் அவர் வசதிக்கேற்ப வியாபார நோக்கத்தில் சில கடவுள்களை வைத்துப் பூஜிப்பதை ஆராய்ந்து தெரிந்துகொண்டு வருகிறோம் .இறைவனின் ஆணையால் ,நால்வர் போராடி மீட்டு வந்த சைவ சமயம் ஆன்மீக பூமியில் எப்படி சீரழிந்துகொண்டு வருகின்றது என்பதை தெரிந்துகொள்வதோடு அல்லாமல் ,ஒரு சைவனாக என்னால் சைவ சமயத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஓர் உந்துதல் எழுந்துள்ளது.

மாணிக்க வாசகர் பாடிய 'வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி 'என்பதுபோல ,எதையும் வாசித்து,கிரகித்து அதில் லயித்துப்போக முடியாத மனம் ,இந்த சிவனருள் இதழை வாசித்து உள்வாங்கி அதை செயலில் நிறுத்தி செம்மைப்படுத்துகிறது என்றால் அதுவும் அவன் திருவருளே!

போற்றியோ நமசிவாய !

.............................................................................................................................................................

திரு.நாகப்பன் ஐயாவிடம் சித்தாரந்த வகுப்பிற்குச் செல்லும் எனது தாயாரிடமிருந்து நான் சிவனருள் எனும் மாத இதழை வாங்கி படிக்கலானேன்.

அவ்விதழை படிக்க படிக்க என்னுள் பல மாற்றங்கள்.

முதலாக, சிவன் ஒருவனே பரம்பொருள். அவன்ன்றி வேறு ஒருவனும் அல்ல என தெளிவுற்றேன். தொடர்ந்து என் வழிபாடு் முறையை மாற்றியமைத்தேன்.
என் வழிபாட்டு அறையிலுள்ள சிவபெருமானை தவிர்த்து மற்ற தெய்வ படங்களை வெளியேற்றினேன்.

இரண்டாவதாக, சிவபெருமானுக்காக கொண்டாடப்படும் பண்டிகைகளையும் நான் உணர்ந்தேன். உதாரணத்திற்கு எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து தைப்பூசம் என்பது முருகனுக்கானது என நான் அறிந்திருந்தேன். ஆனால் தைப்பூசம் சிவபெருமானுக்காக கொண்டாடப்படுவது என சிவனருள் இதழ் மூலம் புரிந்து கொண்டேன்.

மூன்றாவதாக, மூடநம்பிக்கை என்பது சமயம் சார்ந்த விஷயம் இல்லை என்பதையும் அவ்விதழால் அறிந்தேன்.

அதனையடுத்து சைவம் அனைத்து உயிர்களையும் சமமாக கருதுகிறது. அன்பே சிவம் என்பதை அடியேன் உணர்ந்து அசைவத்தை விட்டொழித்துவிட்டேன்.

அதுமட்டுமின்றி, அடியேன்
சைவ சமயத்தினை பற்றிய எண்ணிலடங்காத அரிய கருத்துக்களை அறிந்தும் புரிந்தும் கொண்டேன். சிவனருளை படித்துவிட்டு நான் பலரிடம் என் கருத்துக்களை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளேன்

இறுதியாக, சிவனருளால் என் வழிபாட்டு முறை மாற்றம் கண்டது ; சைவத்தின்பால் எனக்கு ஈர்ப்பு அதிகரித்தது. மேலும் சிவனருளை சிவதொண்டாக கருதி அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோருக்கு மிக்க நன்றி.

~ சைவத்தின் மேல் வேறு சமயம் வேறில்லை ~


சிவசிவ

1 comment: