Sunday, 16 June 2013

யாரிடமோ சொல்வதை ,இறைவனிடம் சொல்லுங்கள்!

                        இறைவனிடம் கையேந்துங்கள்,அவன் இல்லையென்று சொல்வதில்லை.ஆனால் நாம்தான் அவனிடம் சொல்வதை விட்டு நம் பிரச்சனைகளை எல்லோரிடமும் கூறிக்குறைப்பட்டுக்கொள்கிறோம்.யாராவது ஆறுதலாய் ஏதும் சொல்வார்களோ,அல்லது நாம் செய்த தவற்றினை நியாயப்படுத்தி சொல்வார்களா என்றெல்லாம் ஒரு எதிர்பார்ப்பும் உண்டு.என்ன செய்ய நாமும் சராசரி மனுச ஜென்மம் ஆயிற்றே?

                 எங்கள் கிராமத்தில்  என் அண்டைவீட்டு குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம்.சுமார் பத்து வருடங்களுக்கு முன் ,(வாணி)அவள் வீட்டில் அவள் ஒரே பெண்பிள்ளை.அழகுக்கு பஞ்சமே இல்லை.வடநாட்டுப்பெண்ணைப்போல வெள்ளைத்தோல் ,சாந்த குணம் ,நல்ல பெற்றோர்கள் ,இரண்டு சகோதரர்கள் என்ற அருமையான குடும்பம்.18 வயதுக்கு பிறகு ,காதல் வயப்பட்டாள்,திருமண ஏற்பாடுகள்மும்முரமாய்  நடந்துகொண்டிருக்கும் வேளையில் அந்த அதிர்ச்சி செய்தி எங்கள் கிராமத்தையே ஒரு கலக்குகலக்கியது.அவளுடைய மாப்பிள்ளையை போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக போலிசார் கைது செய்தனர்!
                                                                               
                       பிறகென்ன ?கோர்ட் ,கேஸ் ,குற்றம் என்று மாப்பிள்ளைக்கோலத்தில் இருக்கவேண்டியவன்  கைதியாக கம்பிக்கு பின்னால் சென்றான்.நண்பரின் காரை அவன் ஓட்டிச்சென்றதால் ,அது அவன் செய்த குற்றம் இல்லை என்று தீர்ர்ப்பானது ,இருந்தும் அவனுக்கும் அதில் பங்கு உண்டு என்று  அவனை நாடு கடத்த கோர்ட் அனுமதி கொடுத்தது.கடாரம் கொண்ட கெடா மாநிலத்தின் எல்லைக்கு அனுப்பபட்டான்.இங்கே வாணி அழுது புரண்டாள்.இருட்டு அறைக்குள் உண்ணாவிரதமிருந்தாள்.குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது.நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடைபெறவில்லை.கேட்பவருக்கெல்லாம் பதில் சொல்லி மாளவில்லை.அவமானம் ஒருபக்கம் ,வேதனை மறுபக்கம்.
                                                                             
                     ’இனியும் என்னால் பிரிந்து வாழ முடியாது’ என்று  நீதிமன்ற அனுமதியுடன் வாணி ,அவன் இருந்த கடாரம் மாநிலத்துக்கே சென்றாள்.ராமன் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று திருமணமும் சில முக்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்தது.வருடங்கள் உருண்டோடின,கர்ப்பம் ஆனாள்.பெண் குழந்தைப்பிறந்தது.தாய் வீட்டுக்கு வந்தாள்.அவனுடைய தண்டனைக்காலமும் முடிவு பெற்றது.அவனும் அவளோடு வந்து சேர்ந்தான்!கொஞ்சகாலம் உருப்படியாய் இருந்தவன் சிலநாட்கள் கழித்து மீண்டும் ஒரு தவற்றைச் செய்தான்.அவன் தாயிடம் யாரோ வட்டிக்குப் பணம் வாங்கி விட்டு ஏமாற்றியதால் ஆத்திரம் அடைந்தவன் ,அவனை சக நண்பர்களோடு சேர்ந்த்து அடித்துக் கொலை செய்தான்!மீண்டும் சிறைவாசம்!

                      பிறந்த குழந்தை அப்பன் முகம் தெரியாமல் வளர்ந்தாள்.கிராமத்து வீட்டை விட்டு அவர்களும் வெளியேறினர்.அவள் மனம் வெறுத்துப்போனாள்.குழந்தையைக் குடும்பத்தில் எந்த குறையுமின்றி வளர்த்தனர்.அவள் சோகங்களை மறைக்க ,மறக்க நினைத்து வேலைக்குச் சென்றாள்.கொஞ்சம் கொஞ்சமாய் மாறினாள்.அவள் தாய் சதா அழுதுகொண்டே இருப்பார்.என் சோகங்களை இறைவனிடமசொல்கிறேன்.அவன் என்றாவது கண்ணைத் திறந்து பார்ப்பான் ’என்று நித்தம் அழுவார்.’என் தங்கையின் நிலைமை இப்படியிருக்க நான் எங்கே திருமணம் செய்வது ?என்று ஒரு சகோதரன் பிடிவாதமாய் இருந்தான்.அவள் அழகுக்கு எத்தனையோ வரன் வந்தது ஆனாலும் பெண் பிள்ளையை நினைத்து அவள் மறுத்தாள்.வருடங்கள் ஓடின ,அவன் விடுதலையாகி வந்தான் ,இவளும் அவனுக்கு விடுதலைக்கொடுத்தாள் ,ஆம் விவாகரத்து பெற விரும்பினாள்.அவன் வீட்டாரோ உடனே அவனுக்கு பெண் பார்க்க தொடங்கினர்.
                                                                     
                                                              
                 கிராமத்து வீட்டை விட்டு வெளியேறிய வாணி குடும்பம் நான் திருமணம் செய்து தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் வந்து குடியேறினர்.தினமும் அவர்கள் குடும்பத்தைப்போய் பார்ப்பேன்.ஆறுதல் சொல்வேன் .வாணியின் தாயும் இடைவிடாது சிவபூசைகள் செய்து வந்தார்.பல வரன்கள் வந்தாலும் ,பிள்ளையின் எதிர்காலம் குறித்து ஏற்க மறுத்தாள் வாணி.ஆனாள்..........ஒரு நல்ல குடும்ப பையன் (அவனும் எங்கள் கிராமமே!) வாணிக்கு வரனாக அமைந்தான்.அவனுக்கும் அவளைப்போலவே வாழ்க்கை.அவன் மனைவி அவனை விட்டு விட்டு வேறு யாருடனோ ஓடிவிட்டாள்.அவனும் வாழ்க்கையை வெறுத்தவன்.அவனுக்கு தெரியாமல் நண்பர்கள் வாணியை அவனுக்கு கேட்க ,அவன் மறுத்தான்.வாணியும் மறுத்தாள்.சந்தர்ப்ப சூழ்நிலை ஒருமுறை இருவரும் சந்தித்துக்கொள்ள ,அவன் வாணியின் அழகிலும் பண்பிலும்  மயங்கி ,பெற்றோர்களோடு பெண் கேட்க வந்தான்.வாணி பயந்தாள்,இன்னொரு வாழ்க்கையா?குழம்பினாள்.குடும்பம் கூடி ‘நன்கு தெரிந்த குடும்பம் ,அவன் பெற்றோர்கள் அருமையானவர்கள் ‘என்றெல்லாம் அவள் மனதை மாற்றினர்.வாணி மனம் மாறினாள்!
                                                                                  

                  பையனின் பெற்றோர்கள் வானியின் மகளை ‘எங்கள் பேத்தி இத்தனை நாட்கள் உங்களோடு வாழ்ந்துவிட்டாள்,இப்போ எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் ,நாங்களும் தாத்தா பாட்டியாக இருக்க ’என்று வாணியின் பிள்ளையை விடுமுறை நாட்களில் அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.வாணியின் பெற்றோரின் பாதி பாரம் இறங்கியது.பேத்திக்கு நல்ல குடும்பம் ஒன்றூ தங்களை அடுத்து கிடைத்ததை எண்ணி கண் கலங்கினர்.வாணியும் அவனும்  பழக ஆரம்பித்தனர்.மனம் ஒத்து போனது .பத்து வருடங்கள் கழித்து வாணியின் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் மிகவும் முறையாக ,திருப்தியாக ,எந்த சலசலப்பும் இல்லாமல் நடந்தேறியது.விருந்துபசரிப்பில் மாப்பிள்ளை எல்லோர் முன்னிலையிலும் ;’எங்களுக்கு நேற்று திருமணம் ஆனது ஆனால் இன்று எனக்கு பத்து வயதில் பெண் குழந்தை இருக்கிறாள் ‘என்று இரு வீட்டுப்பெரியார்கள் முன்னிலையிலும் வாணியின் மகளைத் தத்தெடுத்தார்.அந்த கண் கொள்ளாக்காட்சியைக் கண்ட அனைவரும் கண்கலங்கினர்.வாணியின் அம்மா எங்களிடம் சொன்ன வார்த்தைகள் ‘இறைவன் என்னை மன உளைச்சலில் இருந்தும் எங்கள் பாரங்களையும் இறக்கி வைக்கவும் சுமார் பத்து வருடங்கள் எடுத்துக்கொண்டான் ,இருந்தாலும் இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைய அந்த பத்து வருடங்கள் எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை காரணம் நான் அவனோடு இத்தனை வருடங்களாய் பிடிவாதமாய் கூறிவந்ததை அவன் செவிமடுத்து வந்துள்ளானே’என்று ஆனந்த கண்ணீர் சிந்த ‘என் அப்பன் கூத்த பிரானை நான் ஒரு கணம் திரும்பிபார்க்கிறேன்!ஏதோ சினிமா பார்த்ததுபோன்ற உணர்வுடன் வீடு வந்து சேர்ந்தேன்.
                                                                            

5 comments:

 1. ஒரு நாவலுக்குரிய நிகழ்வுகளை
  சம்பவங்களை மிக மிக அழகாகச் சொல்லிச்
  சென்றவிதமும் தலைப்புக்கேற்ற்படி
  யாரிடமும் சொல்வதற்குப்பதில் இறைவனிடம்
  சொல்வது நிச்சயம் பலனளிக்கும் என
  முடித்தவிதமும் அருமை
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.

  ReplyDelete
 3. இறைவனிடம் கை ஏந்துங்கள் ....அவன் இல்லையென்று சொல்லுவதில்லை..

  ReplyDelete
 4. சகோ, மிக அருமை... ஒரு சிறந்த எழுத்தாளரின் படைப்பு போல் உள்ளது..

  ReplyDelete
 5. மிகவும் அருமை வாழ்த்துக்கள் செல்வி .....

  ReplyDelete