Tuesday, 25 June 2013

என்னை ஏமாற்றிய சில தருணங்கள்!


                   சின்ன பிள்ளை முதலே என்னைப்பற்றி என் அப்பா சொல்லும் ஒன்று நான் ரொம்ப ராசியான பிள்ளையாம்.ஆம் நான் பிறந்த சமயம் அப்பாவுக்கு லாட்டரியில் பணம் கிடைத்ததாம்.மேலும் நான் வீட்டில் ஐந்தாவது பெண் பிள்ளையாம் .மலேசியாவில் அபப்டி ஒரு அப்பட்டமான நம்பிக்கைகூட உண்டு .ஐந்தாவது பெண் பிள்ளை என்றால் அவள் குடி போகும் வீட்டுக்கு அதிர்ஷ்டம் என்று.அந்த அடிப்படையில் கூட பலர் பெண் கேட்டு திருமணம் செய்து கொள்வதை கண் கூடாக காண முடியும்.ஆனால் என்னைப்பற்றி நான் நினைக்கும் ஒன்று எப்போதுமே என்  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது!                                                                                
                   அதற்கு ஒரு காரணமும் உண்டு.இல்லை பல காரணங்கள் உண்டு.சின்ன வயசுல ,நாங்கள் வறுமை குடும்பத்தில் இருந்து வந்தோம் என்பதை நான் பல இடங்களில் சொல்லியதுண்டு.நினைத்த மாத்திரத்தில் எங்கேயும் போகமுடியது ,வாங்கி சாப்பிடமுடியாது.ஷாப்பிங் இல்லை.விடுமுறைக்கு மட்டுமே அப்பா ,அவ்வா பாட்டி வீட்டுக்கு அழைத்து போவார்.அதுவும் பணம் இருந்தால்.ஒருமுறை நவம்பர் மாதம் ,அப்பா அறிவிப்பு செய்தார்.’சரி அடுத்தவாரம் பாட்டி வீட்டுக்கு போகலாம்’என்று.ஐயோ எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .பக்கத்துவீட்டு தோழி ஒருநாள் முன்னதாகத்தான் .ரொம்ப பெருமையா ‘நாங்கள் எங்க அத்தை வீட்டுக்கு போகிறோம்,நீங்கதான் வீட்டுலே உக்காந்து இருப்பிங்க’என்று.அப்போ அதுவெல்லாம் மானப்பிரச்சனையாச்சே!                                                                          
                 அன்று காலையிலே எழுந்து (அம்மா எழுப்பாமல்) வேலைகளைச் செய்தோம்.பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய டிராவல் பேக்கில் எங்கள் துணிகளையெல்லாம் பேக் பண்ணினோம்.விடுமுறைக்கு முன்பு ஆசிரியர் ‘யாரெல்லாம் தூரமா பயணம் செய்கிறீர்களோ,ஏதாவது கதைப்புத்தகம் கையோடு கொண்டு போங்கள்’என்று சொன்னதால் ,ஒரு பேக்கில் கதைப்புத்தகங்கள்.பாட்டி வீடு ஜோகூரில்.ஆகவே பயணம் சுமார் 5 மணி நேரம்.அம்மா எங்களின் எக்சைட்டிங் பார்த்து’ஏய் ஒழுங்கா இருங்க,இன்னும் அப்பா முடிவு பண்ணல,அப்பா சம்பளம் கிடைத்தால்தான் போகலாம் ‘என்றார்.
                 ஆனால் நாமதான் யார் சொன்னாலும் கேட்க மாட்டோமே?காதிலே போட்டுக்கொள்ளாமல் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்தோம்.அப்பா வரும் நேரம் ,குளிச்சி கிளம்பி உட்கார்ந்திருந்தோம்.அப்பா வந்தார் ஆனால் அவர் எதிர்பார்க்கவில்லை நாங்கள் இப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று.வீடு வந்தது அப்பா ரொம்ப சாதாரணமாய் ‘இன்னும் சம்பளம் போடல,முதலாளி வெளியூர் போயிட்டான் ,அடுத்த வாரம்தான் வருவான்’என்று.மேலும் அவன் காரும் நமக்கு கிடைக்காது ‘என்றார்.என் இதயம் சுக்கு நூறாய் வெடித்தது.எல்லோரும் நார்மலாய் இருந்தனர் ஆனால் என்னால் அப்படி முடியல காரணம் நான் தான் ஏற்பாட்டுக்குழு தலைவியாச்சே?அந்த ஏமாற்றம் என்னை வெகுவாய் வாட்டியது காரணம் அடுத்த வாரம் பள்ளி விடுமுறை முடியும் வாரமாச்சே?                                                                                
                   12 வயதில் தலைமை மாணவி என்பது மிக முக்கிய பொறுப்பும் பதவியும். ஆக என்னைத் தேர்ந்தெடுக்க எல்லா ஆயத்தங்களும் நடந்துகொண்டிருந்தன.பரிட்சையில் முதல் நிலையில் வருபவர்களுக்குதான் அந்த வாய்ப்பு பிரகாசம் ஆனால் அதில் இன்னுமொரு தகுதி அடக்கம் என்பது பிறகுதான் எனக்கு தெரியவந்தது.என் வகுப்பில் என்னுடன் சேர்த்து என் தோழிகள் இரண்டு பேர் முதல் ,இரண்டாம்,மூன்றாம் நிலையில் தேர்வில் வருவது வழக்கம்.அந்த வகையில் நானும் இன்னொரு தோழியும் முதல் நிலை ,சோ இரண்டாம் இடம் இல்லை,மூன்றாம் நிலையில் இன்னொரு தோழி.என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.முடிசூட்டு விழாவுக்கு தயாராகும் இளவரசி போல நான் தயாராகினேன்.என்னை அந்த வருட கட்டொழுங்கு ஆசிரியர் வர சொன்னதாக தகவல்.என் கனவுகள் எல்லாம் என் கண் முன்னே!ஓடினேன்.படி ஏறி ஆபிசுக்குள் போனேன்.                                                                            
                அங்கே வகுப்பாசிரியர்,கட்டொழுங்கு ஆசிரியர்,தலைமையாசிரியர் என்று எல்லோரும் ஏதோ ஒரு போஸ்ட்மார்ட்டம் பண்ணிய பிறகு களைச்சிபோன மாதிரி இருந்தனர்.என் வகுப்பாசிரியர் என்னை அழைத்து 'செல்வி ஐயா உன்னிடம் ஒன்னு சொல்லுவார்,கேட்டுவிட்டு வகுப்புக்கு வா’என்று விடபெற்றார்.என்ன ஒரே புதிரா இருக்கே?மேலும் அதிர்ச்சி என்னவென்றால் ,என் தோழிகள் இருவரும் அங்கே முகத்தில் மகிழ்ச்சியுடம் காணப்பட்டனர்.கட்டொழுங்கு ஆசிரியர் ’செல்வி ஒரு விசயம்மா ,இல்லை தலைமை மாணவியாக உன்னை தேர்ந்தெடுக்க முடியவில்லை,அதுக்கு காரணம் நீ ரொம்ப குள்ளமாக இருக்கிறாய்!மாணவர்கள் பயப்படும் அளவுக்கு உன் உடல் வாகு இல்லை,ஒரு கம்பீரம் இல்லை ,ஆகவேதான் இந்த பிள்ளைகளை எடுத்துவிட்டோம்!என் தலையில் ஒரு கல்லைப்போட்டதுபோல் இருந்தது?அப்போவே அழுகையை மறைக்கும் திராணி எங்களுக்கு அதிகம் இருந்தது என்றே சொல்லலாம்.
எந்த உறுதியும் இல்லாமல் வீட்டில் எல்லோரிடமும் சொல்லிட்டோமே?எப்படி ?பக்கத்து வீட்டு தோழியை எங்களால் கவிழ்க்க முடிந்த ஒரே ஆயுதம் படிப்புதான்.ஆனால் நான் ஏமாந்துட்டேனே??                                                                                
                            என் அம்மாவின் உடன் பிறந்த அண்ணாவும் தம்பிகளும் அரசு அதிகாரிகள்.அம்மா திருமணம் செய்து வந்த பிறகு ரொம்ப நாட்களுக்கு அம்மாவை வந்து பார்த்ததே இல்லையாம் .ஒன்று தாய்மாமான் நிறைய பொறுப்புகள் கொண்டவர்.மற்றொன்று முன்பெல்லாம் ஜோகூரில் இருந்து கோலாலும்பூர் வருவது என்றால் செலவு அதிகமாகும்.இன்னொன்று அம்மா வசதியில்லாத குடும்பத்தில் வாழ்ந்து வந்ததால் ,அம்மாவின் பிறந்த வீட்டில் யாரும் வந்து தொந்தரவு கொடுக்கமாட்டார்களாம்.
நாங்கள் எல்லாம் தலையெடுத்து ஓரளவு வசதி வந்த பிறகுதான் எல்லோரும் வாருவாங்க ,கலந்து கொள்வார்கள்.அந்த வகையில் எனக்கு 13 வயசு இருக்கும் .மூத்த தாய்மாமன் கோலாலும்பூர் வருவதாக தகவல் .அதில் இன்னுமொரு மகிழ்ச்சி ஐயிட்டம் ,அவர் எங்கள் வீட்டில் இரவு  உணவுக்கு வந்து விட்டு பிறகு மீண்டும் ஜோகூர் கிளம்புவதாக கேள்வி.ஏனோ தெரியாது,அவர்கள் எங்களுடன் குளோசாக இருந்தது கிடையாது ஆனால் பாசம் அதிகம் ,அதுக்கு ஒரு காரணம் அப்பா அவர்களிடம் வைத்திருந்த மரியாதை.ரொம்பெ பெருமையாக சொல்லுவார்.அதைக்கேட்டு கேட்டு எங்களுக்கும் எங்கள் தாய்மாமன் மீது அதிக அன்பு.                                                                                  
                 அம்மா மாமா வரவை எதிர்பார்த்து விதவிதமாக சமைத்தார்.மாமா தமிழைவிட ஆங்கிலம் ,மலையாளம் தான் அதிகம் பேசுவார்.சோ நானும் என் தங்கையும் தாய்மாமா மனதில் இடம்பிடிக்க எண்ணி ,எப்படியோ எங்கள் வீட்டில் கிடந்த ‘ரெபிடெக்ஸ் ஆங்கிலம் பயிலுங்கள்’புத்தகத்தில் இருந்து சில முக்கிய வசனங்களை மனப்பாடம் செய்தோ.மாயை வாழ்க்கைக்கு அப்படி ஓர் ஆசை அந்த சமயம். அதிலும் நான் ஒருவாரம் முன்பே எங்கள் அறையில் யாருக்கும் தெரியாமல் பயிற்சி செய்வேன்.மாமா வந்தால் எப்படி வரவேற்பது?என்ன சொல்லி கைகுலுக்குவது?அவர் ஏதும் வாங்கி வந்தால் எப்படி நன்றி சொல்வது?அவர் வீட்டுக்கு போய் ‘அந்த வீட்டில் செல்வி ரொம்ப ஸ்மார்ட் ‘என்று சர்டிஃபிப்கேட் கொடுக்கணும் என்று ரொம்பவே உழைத்தேன் ஆனால் அறைக்குள்.அந்த நாளும் வந்தது .வழிமேல் விழிவைத்து காத்திருந்ந்தோம் ,போற வர கார்களையெல்லாம் , எட்டி எட்டி பார்ப்போம்!.வீட்டில்  போன் இல்லை.பக்கத்து வீட்டு தோழி கொஞ்சம் வசதியானவள் .அப்போவே அவ வீட்டில் போன் இருந்தது.ஆபத்து அவசரத்துக்கு அவ வீட்டு போன் நம்பரைத்தான் உறவினர்களிடம் கொடுத்து வைப்பது வழக்கம்.இரவு அவள் வீட்டில் இருந்து ஒரு குரல் ;ஏங்க ராதா அம்மா(என் அம்மாவின் பட்டப்பெயர்) போன் ,யாரோ கூப்பிடறாங்க’அம்மாவும் போய் பேசிட்டு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் வந்தாங்க.அப்பா என்ன என கேட்டார்.’அண்ணா வரலையாம் ,அவர் கோர்ஸ் முடிந்து அரசு அதிகாரிகளுடன் காரில் போவதால் சொந்த வேலைக்காக எங்கேயும் போக அனுமதியில்லையாம்’என்று முடித்தார். ஐயோ !மாமா வரலியா?வரலியா? நாங்கள் ஏழுபேரும் கோரசாக கேட்ட கேள்வி ?சரி வாங்க நாம சாப்பிடலாம்’என்று எல்லோரும் இரவு உணவுக்கு ரெடி .ஏனோ எனக்கு மட்டும் சோறு வயிற்றுக்குள் போக அடம்பிடித்தது?                                                                          
            முன்பெல்லாம் எங்களுக்கு என்று சட்டை வாங்குவது தீபாவளிக்கு மட்டுமே.மற்ற நாட்களில் அக்கா இருவர் மற்றும் அத்தை போட்டு பாதி நொந்துபோன உடைகள்தான் எங்களுக்கு.அப்படி இல்லாவிட்டால் ,என் அத்தை ஒரு பணக்கார அம்மா வீட்டில் வேலை செய்து வந்தார்.சிங்கையில் பெரிய உத்தியோகத்தில் அந்த அம்மாவின் கணவர் வேலை செய்துவந்தார்.அவுங்க வீட்டில் வாங்கி அவுங்க பிள்ளைகளுக்கு பிடிக்காத உடைகள் அல்லது அதுங்க போட்ட சில அழகான உடைகளை கொண்டு வந்து அத்தை கொடுப்பாங்க.அதில் போடும்படியான உடைகளைத் தேர்ந்தெடுத்து அம்மா துவைத்து கொடுப்பாங்க.அந்த வகையில் அந்த சீசனில் ஒரு அழகான பூ போட்ட கவுன் famous!அப்படி இப்படின்னு எங்களுக்கு அந்த கவுன் சிக்கியது.எனக்கும் தங்கைக்கும் சண்டை .நான் அவளை  வென்று கையிலிருந்து  புடுங்கி எடுத்து போய் ஒளிவச்சிட்டேன்.ஆனால் தவறான இடத்தில் வைத்துவிட்டேன்!துணிகளை வீசும் ஒரு பையில் திணித்து வைத்தேன்.                                                                                  
                   எப்போடா எங்கேயும் போவோம் ? அந்த கவுன் போட்டு போகலாமே ?என் ஆசை ,கனவு!இரண்டு மூன்று நாட்கள் கழித்து ,சித்தப்பா வந்து .அப்பாவிடம் ‘அண்ணா செல்வியையும் சுகுணாவையும் நாளை என் முதலாளி சீனர் வீட்டில் விருந்துக்கு கூட்டி போகிறேன் .ரெடியா இருக்க சொல்லுங்கள்’என்றார்.ஐயோ !சீன வீட்டில்  விருந்து என்றால் ,எப்படி போகனும்?என் கவுனுக்கு வேலை வந்துவிட்டது.குளித்துவிட்டு ஓடிப்போய் அந்த கவுன் இருந்த பையைத் தேடினேன்.பையைக்காணவில்லை ‘அம்மா எங்கே அந்த பையைக் காணோம்?என்று அலறினேன்.அம்மாவும் ‘அது வீசவேண்டிய துணிதானே காலையிலே உங்கப்பா கொண்டு போய் ஆற்றில வீச சொல்லிட்டேன்!முன்பெல்லாம் குப்ப்பைகளை ஆற்றில்தானே வீசுவோம்?ஐயோ!!!ஏன் ஏன் இறைவன் எனக்கு மட்டும் இப்படி?ஓவென அழுதேன் .அம்மா ‘ஏன் என்னாச்சு’என்று அங்கிருந்து கத்தினார்.என் சட்டை அதுலத்தான் வச்சேன்மா’ஏன் வீசினிங்க? ‘.எனக்கு என்ன தெரியும்?நீ என் கிட்ட சொன்னியா?எனக்கு பதில் சொல்ல பொறுமை இல்லை.என் தங்கையும் ஸ்பாட்டுக்கு வந்து ‘என்னை ஏமாத்தி புடுங்கிட்டு ஓடினாய்?வெரி வெரி குட்’என்று சொல்ல ,அதுதான் எனக்கு இன்னும் அழுகாச்சி அழுகாச்சியா வந்துச்சி.’நான் எங்கேயும் போகல,எனக்கு சட்டை இல்லைன்னு ‘ பழைய சட்டையைப்போடு ,கவிழ்ந்து படுத்து அழுதேன்.
’போகாட்டால் பரவாயில்லை அண்ணாவும் பாப்பாவும் போகட்டும்’என்று அம்மா என் உணர்வை மதிக்கவே இல்லை!                                                                              
                  அந்த ஏமாற்றங்கள் அப்படியே போகாமல் இன்னமும் விமானம் ஏறி வந்து ஏமாத்திக்கொண்டுதா இருக்கு!ஆனாலும் ஏதோ கொஞ்சம் கொஞ்சமாய் பக்குவப்பட்டு விட்டதால் ,எதிர்பார்ப்புகளைக் குறைத்து ஏமாற்றங்களை அலட்சியம் செய்ய பழகிக்கொண்டோம்!எதிர்ப்பார்ப்புகளை குறைத்தால் ஏமாற்றமும் குறையும் என்று அன்றைக்கே யாரும் சொல்லவும் இல்லை.அப்படி ஒன்றைக் கற்றுக்கொடுக்க முகநூலும் இல்லையே!
           

6 comments:

 1. வலிகள் புரிகிறது... தானாக சிலவற்றை உணர்ந்தால் மனம் விரைவில் பக்குவப்பட்டு விடும்...

  ReplyDelete
 2. சின்ன குழந்தையில் நாம் பட்ட கஷ்டம் மாறாமல் மனதுக்குள் மாறாத வடுவாகவே இருக்கிறது இல்லையா...!

  ReplyDelete
 3. எழுத்தில் மாற்றம்....!

  பத்தி பிரித்துப் பகிர்ந்தமை நன்று...!

  வாழ்த்துக்கள் டீச்சர்....!

  ReplyDelete
 4. சகோ,
  Heated Gold becomes ornament,
  Beated Copper becomes Wires,
  Depleted Stone becomes Statue,
  ….
  So the more pain u get in life u become more “VALUABLE”.

  ReplyDelete
 5. அண்ணி...நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் குழந்தை பருவத்தில் சில,பல ஏமாற்றங்களை சந்திச்சிருப்போம் தான்...இப்போ அதெல்லாம் யோசிச்சு பார்த்தால் சுமையா,சோகமா தெரியாது....அனுபவங்கள்,ஏறின படிகள் மாதிரி குட் பீல் தான்...மனசை தொட்டு சொல்லுங்க...பணம் கம்மின்கிற ஏழ்மை மட்டும் தான் சில விஷயம் உங்களுக்கு கிடைக்க விடாமல் பண்ணிருக்கும்...ஆனால் ஒரு பணக்கார குழந்தையை விட நீங்க பல மடங்கு மகிழ்ச்சியான விஷயங்களை என்ஜாய் பண்ணிருப்பீங்கனு தான் 'பட்சி' சொல்லுது....நெகடிவ் எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மையை அப்டியே கடாசி போடுங்க ;-0 இங்கே நான் பள்ளி படிக்கும் பிராயத்தில் கிளாஸ்லீடர்க்கு தகுதி, வகுப்பிலேயே உயரமா, கொஞ்சம் பெரிய உருவத்தில் ( அனேகமா பெயில் ஆன ஸ்டுடென்ட் ) இருப்பவங்களை தான் போடுவாங்க....

  அப்புறம் மனோ சொன்னமாதிரி ரைட்டிங் கெப்பாகுட்டி ;-) தூள் ;-)

  விஜி அண்ணாவை ரொம்ப கேட்டதா சொல்லவும் :-)

  ReplyDelete