Sunday, 21 July 2013

அது ஆவியா ?பேயா?

                     இந்த கேள்விக்கு எனக்கு சின்ன பிள்ளைமுதல் சரியான பதில் யாருமே சொல்லவில்லை.அப்பாவைப் பொருத்த வரை ,நாங்கள் பயப்படக்கூடாது என்று ரொம்ப கவனமெடுத்து இந்த கேள்விகளுக்கு பதில் ‘இல்லை’என்றே சொல்வார்.அம்மா அவர் அனுபவப்பட்டதைச் சொல்லுவார் ஆனால் நாங்கள் பயந்தால் அடி கொடுப்பார்.பயத்தை தெளிய வைக்க அறையில் என்னைப்போட்டு அடைத்ததும் உண்டு.அப்பா வழி தாத்தா நிறைய உண்மைப் பேய் கதைகளைச் சொல்லுவார் ஆனால் அவரிடம் பயம் என்று நான் பார்த்ததே இல்லை.ஜப்பானியர் காலத்தில் விடிய விடிய பிணத்துக்கு தோண்டி வைத்திருந்த குழியில் படுத்து உறங்கியதுண்டு என்று தைரியம் சொல்லுவார்.                                  
                         
                             ஆனால் நான் அனுபவப்பட்ட சில விசயங்களைத்தான் இங்கே கிறுக்கியுள்ளேன்.என் 7 வ்யதில் நான் என் தோழி(தற்போது என் அண்ணி) அவள் அண்ணாவும், இரண்டு அக்காள் எல்லோரும் குளிக்கச் சென்றோம்.அந்த அண்ணாவும் ,தோழியின் மூத்த அக்காளும் ,குட்டையில் மூழ்கி இறந்தனர்.எங்கள் கண் முன்னே!(என் வாழ்வில் மறக்க முடியாத துயரம்.அந்த பாதிப்பு இன்னும்கூட என் பிள்ளைகளை நான் மட்டுமே நீச்சல் குளம் மற்றும் கடலில் குளிக்க அழைத்துச் செல்வேன்.)என் தங்கையை அந்த அண்ணா ரொம்ப அன்பாக பார்த்துக்கொள்வார்.அவர்கள் சாவுக்குப்பிறகு பல பேருடைய உயிரைக்குடித்த அந்த குட்டையில் பேய் உலாவுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.நாங்கள் எல்லாம் உறைந்து போய் கிடந்தோம்!                            
                         
                         சிலமாதங்களுக்குப் பிறகு என் வலதுபக்க அண்டைவீட்டுத் தோழியின் அண்ணா  பள்ளி முடிந்து நான் ,என் அண்ணா ,என் தங்கை மற்றும் அந்த பக்கத்துவீட்டு தோழன் எல்லாம் ஒன்றாகத்தான் வீடு வந்து சேர்ந்தோம்.அவன் வந்ததும் மதியம் உறங்கும் பழக்கம் உள்ளவன் .நமக்கு சுட்டுப்போட்டாலும் அன்று முதல் இன்று வரை மதியம் உறக்கம் வராது!நானும் தங்கையும் ,என் வீட்டுப்பின்னால் ,ஒரு குட்டிக்காட்டு அருகே கொய்யா பழம் பறிக்கச் சென்றோம்.பழம் பறித்து விட்டு திரும்போது ஓரு உருவம் எங்களை உரசி ஓடோடிச் சென்றது!யார் என்று திரும்பி பார்த்தால் ,பக்கத்துவீட்டுத் தோழன்.

                      ஏன் அவ்வளவு அவசரமாக ஓடுகிறான்? என்று நாங்களும் அவன் பின்னே ஓடினோம்.அவன் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தான்.முன்பெல்லாம் திறந்த வெளி டாய்லெட் என்பதால் ,அவன் அங்கேதான் போயிருக்க வேண்டும் என்று நானும் தங்கையும் வீட்டுக்கு வந்தோம்.ஆனாலும் மனசு ஏதோப்போல இருப்பதால் ,பக்கத்துவீட்டுக்குப் போய் ‘தேவியம்மா(தோழனின் அக்கா பெயர்) சுரேஷ் எங்கே?ஏன் எங்களை உரசிட்டு வேகமா ஓடினிச்சி?’என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.அங்கே எனக்கு அதிர்ச்சியூட்டும் பதிலும் காட்சியும் இருந்தன?ஆம், தேவியம்மா ‘அவன் பள்ளிக்கூடம் முடிஞ்சி வந்தது முதல் உறங்குறானே?’என்றார்.அடுத்து அவன் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததையும் என் கண்ணால் பார்த்தேன்.தேவியம்மா என் கதையை ஒரு பொருட்டாக கேட்கவே இல்லை.சின்னப்பிள்ளை என்னம்மோ உளறுதுன்னு அவுங்க வேலையைக் கவனிச்சாங்க. ஓடி வந்து வீட்டில் சொன்னேன் ,அம்மா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.நானும் தங்கையும் ஆடிப்போனோம்.அப்போ அங்கே ஓடியது யார்?
                                                                     
                       
                        அம்மா முன்பு ரப்பர் வெட்டுத்தொழிலாளி.காலை ஆறு மணிக்கு வேலைக்கு போயிடுவாங்க.பிறகுதான் அப்பா வேலைக்கு போவார்.நான் தங்கை ,தம்பி உறங்கும் அறையில் அம்மா இல்லை.நான் கண் விழித்துப்பார்த்தபோது ,அப்போ மின்சாரம் இல்லை,மண்ணெணெய் விளக்கில் ஓர் உருவம் என்னைக் கடந்து சென்றது.ஐயோ! என்னால் கத்தவோ ,அசையவோ முடியவில்லை.ஒரு 2 நிமிடங்களில் அந்த வெள்ளைப் பெண் உருவம் ,பலகை அறையை ஊடுருவி காணாமற்போனது.நான் பிணம்போல கிடந்தேன்!வியர்த்து விருவிருக்க அந்த உருவத்தைப்பார்க்க முடிந்தது ஆனால் கத்த முடியவில்லை?யாரோ வாயை அழுத்திப்பொத்திக்கொண்டதுபோல!சில மணித்துளிகள் கழித்து ,’அப்பா’என அலறினேன்.அப்பா ஒடி வந்து கட்டி அணைத்தார்.’ஏம்மா ,என்னம்மா?என்று பதறினார்.’நான் பார்த்தேன் என்னம்மோ போச்சுப்பா ,நான் பார்த்தேன் ‘என்று கத்தினேன்.தங்கையும் தம்பியும் எழுந்து ,பயத்தில் என்னிடம் வரவே இல்லை.
                                                             
                           
                         அப்பாவும் என்னைத் தேற்றுவதற்கு என்னென்னவோ சொன்னார்.’பேய் இரவில்தான் வரும்மா,இப்போ காலையாகிவிட்டது,வீட்டில் சாமிப்படம் இருக்கு,எப்படி பேய் வரும்?நல்ல பிள்ளை இல்லை ,மறந்துட்டு தூங்குமா’என்று சர்வசாதாரணமாய் கூறிவிட்டு வேலைக்குப் புறப்பட்டார்.அன்று முதல் அந்த அறைக்குள் நான் தனியா போனதாக நினைவே இல்லை.அங்கேயும் என் பேச்சை யாருமே கேட்கவில்லை ,மதிக்கவும் இல்லை.அப்போ நான் பார்த்தது என்ன?
                                                                       
                   
                          திருமணமாகி என் கணவரின் அக்காள் வீட்டில் ஓராண்டு குடியிருந்தேன் .அது மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் இடம்.என் மாமனார் அந்த வீட்டில் இருந்துதான் நோய்வாய்ப்பட்டு வேறு இடத்தில் போய் இறந்தார்.மலாய்க்காரர்கள் வாழும் பகுதியில் ‘ஜின்’என்று சொல்லும் ஒருவகைப்பேயை வளர்ப்பார்கள் என்று இங்கே அதிகம் கேள்விப்பட்டதுண்டு.நான் இருந்த அந்த வீட்டிலும் மூன்று தலை மனிதன் முன்பு வந்துபோனதை என் நாத்தனாரின் மகள் பார்த்து பயந்து போனதாக தகவல்கள் கேள்விப்பட்டதுண்டு!

                     இந்த கன்றாவியை எல்லாம் ஏன் என்னிடம் சொல்லுவாங்களோ தெரியாது?நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயம் ,ஒருநாள் வேலைக்குப்போகாமல் மதியம் அறையில் படுத்திருந்தேன்.வீட்டில் யாருமே இல்லை ,மதியம் இரண்டு மணி இருக்கும் ,திடிரென சமையலறையில் ஓர் வேகமான சத்தம்.ஆப்படிக்கரண்டியை ஓங்கி சட்டியில் அடித்தால் கேட்குமே அந்த சத்தம் .என்னால் நன்கு உணரமுடிந்தது.எப்பேர்பட்ட பயத்தின் உச்சக்கட்டத்திலும் திடிரென ஒரு தைரியம் சில நொடிகளில் வந்து போகும்!அது எனக்கு வந்தது.கதைவைத் திறந்து ,சட்டியை ஆராய்ச்சி செய்தேன்,அந்த சட்டி மேல் இருந்த ஆப்படிக்கரண்டியில் இருந்து  சொட்டு சொட்டாக எண்ணெய் ரொம்ப நேரமாய் ஒழுகிக்கொண்டிருப்பது  ஒழுகியது?அப்போ அது யார் வேலை?
                                                                 
                     

                    நான் தற்போது குடியிருக்கும் வீட்டிற்கு வந்த புதிதில் ,என் அண்டைவீட்டில் ஓர் இறப்பு.நான் வந்த புதிது என்பதால் எனக்கு பழக்கம் இல்லாததாலும்  நான் போகவில்லை.ஓர் இந்திய குடும்பம் அது.யார் இறந்தார் என்று கூட நான் கேட்டுக்கொள்ளவில்லை காரணம் நான் புதிய வீடு குடி வந்த டென்சன் ,குழந்தைபெற்று இரண்டுமாதங்கள் ,அந்த டென்சன் மறுபுறம்.ஓய்வில்லாத வாழ்க்கை.சில மாதங்கள் கழித்து ,அந்த குடும்பம் அந்த வீட்டைக் காலி பண்ணி சென்றார்கள்.கொஞ்ச காலம் கழித்து ,ஒரு சீனப்பெண்மணி தன் குடும்பத்தோடு குடியேறினார்.எங்கள் ப்ளாக்கில் இருக்கும் அனைத்து வீடுகளின் தபால் பெட்டிகளும் அந்த வீட்டு கதவுக்கு எதிர்புறம்தான் இருக்கும்.ஆகவே போகும்போதும் வரும்போது ,அந்த சீனப்பெண்மணியைப்பார்த்து சிரிப்பேன்.
                                                               

                   ஒருமுறை அந்த சீனப்பெண் ஓடோடி வந்து என்னிடம் அரைகுறை மலாய்மொழியில் ‘தங்கச்சி என் வீட்டில் முன்பு யாரும் இறந்து போனார்களா ?என்று பதற்றமாய் கேட்டார்.’நானும் யோசித்து ‘ஆமாம் முன்பு யாரோ இறந்து போனாங்க ,பிறகுதான் அந்த குடும்பம் காலி பண்ணி போனதாக கூறினேன்.’ஏன் ஆண்ட்டி என்னாச்சு?என்றேன்.’அந்த ஆண்ட்டி சொன்ன விசயம் எனக்கு தலைச்சுற்றி ,ஒருகணம் மூர்ச்சையானேன்.’நேற்று இரவு என் மகள் டாய்லெட் போய் அறைக்குள் நுழையும்போது .அவள் அறையிலிருந்து ஓர் உருவம் ,கூன் விழுந்த கிழவன் உருவம் நடக்க முடியாமல் அவளைக் கடந்துபோனதாம்???’.ஐயோ எனக்கு இரத்தமே உறஞ்சிப்போனது.இதை உறுதிப்படுத்த என் அண்டைவீட்டுத் தோழி (எனக்கு முன்பே அங்கே வசிப்பவர்) ,அவளிடம் ஓடிப்போய் ,அந்த வீட்டில் முன்பு யார் இறந்து போனது?என்று கேட்டேன்.ஒரு வயதான கூன் விழுந்த தாத்தா ‘என்றதும் என் தைரியத்துல தீயை வைக்க?என்று ஆடிப்போனேன்.
                                                                         
             
                       அன்று முதல் நான் தபால் பெட்டிக்கு போகவே மாட்டேன்.என் கணவருக்கு அந்த வேலை ,இல்லாவிட்டால் யாரும் பசங்க அந்தப்பக்கம் போனால் உதவி கேட்பேன்.சிறிது காலம் கழித்து அந்த சீன ஆண்ட்டியும் அந்த வீட்டைவிட்டு போனார்கள்.எனக்கும் பைய பைய பயம் குறைந்தது.இருந்தாலும் இரவு 7 மணிக்கு மேல் அந்த பக்கம் போகவே மாட்டேன்.இன்னும் கூட சிலவேளைகளில் என் வீட்டில் இரவில் சில நேரங்களில் உறக்கம் இல்லாமல் தவிக்கும்ப்போது வெளியே வந்து டிவியில் பாடல்கள் கேட்பேன்.அந்த சமயம் யாரோ ஃப்ரிட்ஜைத் திறப்ப்துபோல தோணும்! திடிரென யாரோ ஓடுவதுபோல தோணும்? சில நொடிகள் மூச்சு நின்று போவதுபோல இருக்கும் ,இருப்பினும் என் அப்பா சொல்லி சென்றது ‘வீட்டில் சாமிப்படம் இருக்குதானே??உனக்கு சாமி பிடிக்கும்தானே?அபப்டின்னா உன்னை எதுவும்  நெருங்கமுடியுமா?  இந்த வரிகள்தான் இந்த மோசமான  பயந்தாகொள்ளிக்கு பூஸ்ட்!
                                                                   

5 comments:

 1. அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா…! இந்தளவு அமானுஷ்ய அனுபவங்கள் எனக்குக் கிடைத்ததில்லை…! ஆனால் அவ்வப்போது ஹொய்ஜா போர்டு மற்றும் ஸ்பிரிட் ரைட்டிங் மூலம் மீடியாவாக சில பழக்கமான ஆவிகளிடம் பேசுவேன்…!

  ReplyDelete
 2. எனக்கு கடவுளும் இல்லை ஆவியும் இல்லை

  ReplyDelete
 3. ho.... hi..hieee இதோ வருகிறேன்....

  ReplyDelete
 4. அடப்பாவமே இது வேறயா ? மலேசியா பக்கம் வரலாம்னு இருந்த நினைப்பை மாத்திக்கேட்டேன் ஒடுலெய் மனோ.

  ReplyDelete
 5. நீங்களும் அதுவும் ரொம்ப நெருங்கிய உறவினர் போல அதுதான் உங்களையே சுத்துது..

  ReplyDelete