Sunday 22 March 2020

தனிமையை இனிமையாக்குவோம்!

               நாள் என்ன செய்யும்?கோள் என்ன செய்யும்?கொடுங்கூற்று என்ன செய்யும்?என்று ரொம்ப தைரியமாய் ஊர்குருவி போல சுந்ததிரமாய்  வலம்  வந்த, அனைத்து உலக மக்களையும் இப்போ COVID  19 என்றழைக்கப்படும் தொற்றுநோய் புயல்போல துரத்தி  வருகிறது. சைனாவில், வூஹான் என்ற இடத்தில் உருவாகிய இந்த நோய்,கொரோனா என்றழைக்கப்படும் கொடிய வைரஸ் தாக்கத்தினால் ,பல உயிர்களை பறித்துக்கொண்டது.உலகத்துக்கே மருட்டலாக இருந்து வரும் அந்த தொற்று நோய் ,நம்மைத் தொற்றிக்கொள்ளாமல் இருக்க உலக நாடுகள் பல, ஊரடங்கு மற்றும் நடமாட்டக்  கட்டுப்பாட்டு  ஆணை என  பொது மக்களை, அவர்கள் நலம் காக்கும்  எண்ணத்தில் தத்தம்  வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளது .
                                                               
                தனிமைப்படுத்தப்பட்ட சில நாட்களிலே ,நமக்குள் ஒரு விரக்தி,கோபம்,திருப்தியின்மை .  தொற்றுநோய் பரவும் பயத்தில் இருக்கும் நமக்கு ,இன்னுமொரு கொடிய  நோய் தொற்றிக்கொண்டது என்றால் , இந்த தனிமைப்படுத்தப்பட்ட சூழல்தான்! பலருக்கும் பலவித மன உளைச்சல்கள்,ஏக்கங்கள். நினைத்த இடத்துக்குப் போக முடியவில்லை, ஆசைப்பட்டு எதையும் போய் சாப்பிடமுடியவில்லை,வேண்டியவர்கள் வீட்டுக்குப் போக முடியவில்லை,பள்ளிக்கூடம் போக முடியவில்லை,காலேஜ் போகமுடியவில்லை,பல்கலைக்கழகம் போகமுடியவில்லை,வேலைக்குச் செல்ல முடியவில்லை என ஒரே புலம்பல். நம் நிலைமையே இதுவென்றால்?நம் பிள்ளைகளின் நிலை என்னவாக இருக்கும்?இந்த நிலை தொடர்ந்தால் ,நம்மில் பலரும் மனநோய்க்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்சம் உறுத்துகிறது!
                                                                         

             உல்லாசமாய் வார இறுதி நாட்களில் ஊர் சுத்தி பழகிய பிள்ளைகள்,வாரத்தில் ஒரு நாள்  வெளியில் சாப்பிடும் குடும்பங்கள் என பழகிபோன நாம்,தற்போது கையில் விலங்கிட்டது போல் முடங்கிக்கிடக்கிறோம். நாளுக்கு நாள் செய்வதறியாது ,உணவு உறக்கம் என்று சோம்பேறிதனத்தை விலை கொடுத்து வாங்குவது  போல ஆகிவிட்டது.அந்த சூழலை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்களாகிய நாம் உள்ளோம்! இக்கட்டான சூழலை ,இனிமையான சூழலாக உருவாக்குவது ஒரு சவால்தான்.ஆனால் அந்தச் சவாலை நாம்  ஒரு கலையாக உருவாக்கலாம்.
                                                                                       
                                                 
                 அந்த வகையில் நாம் என்னெவெல்லாம் நம் பிள்ளைகளுக்குச் செய்து கொடுக்கலாம்?நல்ல வழியில் எப்படி பொழுதை  போக்குவது  என்பதைக் கற்றுக்கொடுக்கலாம்.முதன்முதலில் ஒன்றை நம் பிள்ளைகளுக்கு வலியுறுத்துங்கள்.பொதுவாகவே வீட்டில் இருந்தால் ,நம் மகிழி கருவியாக செயல்படுவது  தொலைபேசி,தொலைக்காட்சி  அல்லது கணினி!இதுதான் நம் பிள்ளைகளுக்கு பெரிய விளைவுகளைக் கொடுக்கின்றன .இது ஆய்வில் கூறப்பட்ட உண்மைகள். அந்த கர்மங்களை ஒரு பக்கம் வைத்துவிட்டு,சில யுக்திகளைக்  கையாள்வோம்.
                                                                           
               நம் பாரம்பரிய விளையாட்டுகள் பலவும்  நிறைய திறன்களைக் கொண்டவை,பயனுள்ளவையம் கூட.அதில் ,கண்ணாமூச்சி ரே,ரே ,எலியும் பூனையும்,ஒரு குடம் தண்ணி ஊத்தி தட்டாமாலை,தட்டாங்கல் கிச்சு கிச்சு தாம்பாளம் ,குலை குலையாய் முந்திரிக்காய்,பரமபதம்  என சொல்லிக்கொண்டே போகலாம்.இவற்றில் ஏதாவது ஒன்றினை ஒரு நாளைக்கு அறிமுகப்படுத்தலாம்.அவர்களுக்கு அவைகள் பிடிக்குமா என்ற சந்தேகம் வருவது நியாயம்தான்.ஆனால் அனைத்துச் செயல்களுக்கும் ,ஒன்று பயிற்சி ,அடுத்து  முயற்சி!பெற்றோர்களே! இப்படி ஒரு விடுமுறை இனி அமையுமா? என்பது கேள்விக்குறிதான்!உள்ளங்கையில் உலகத்தை வைத்துக்கொண்டு,மேலை நாடுகளின் மோகத்தை நாமும் பின்பற்றுகிறோம்.தொலைத்தது போதும் ,அதை மீட்டு எடுக்கவே இந்த ஊரடங்கு ,ஆணை(விடுமுறை) என எடுத்துக்கொள்வோமாக.
                                                                                           
                  பிள்ளைகளுக்குக்  கதை சொல்லுங்கள்,கதை கேட்டு வளரும் ஒரு குழந்தை ஒரு நல்ல படைப்பாளியாக உருவாகிறது.தயவு செய்து,சீரழிக்கும்  டிவி சீரியல் வேண்டாமே! பாடல் போட்டி ,புதிர் போட்டி நடத்துங்கள்.பொது அறிவு கேள்விகளை முன் வையுங்கள்.ஓவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும்.நடனம் ஆட வைத்துப்பாருங்கள்.விடுமுறை கழிந்து, பள்ளி போகும் அவன்/அவள் ,ஏதாவது மாற்றத்தைக் கொண்டு செல்லட்டும்.
                                                                           
                            ஆங்கிலத்தில் 'கோல்டன் டைம்' என்றழைக்கப்படும் . குடும்பத்தினரோடு அமர்ந்து உணவு உண்ணும் பண்பாட்டினை , உருவாக்கிக் கொடுங்கள்.இந்த சமயத்தில்,நம்மிடையே குறைந்து வரும்  வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்வதுதான் இன்னுமொரு சிறப்பு அம்சம். அவர்கள் விரும்பும் விளையாட்டுகளை  விளையாட வசதிகளை ஏற்பாடுச்  செய்து கொடுங்கள்.அவ்வப்போது உலக நடப்புகளை எடுத்துச்சொல்லுங்கள்.குடும்பமாக அமர்ந்து செய்திகளைப்  பார்க்கலாம்.மரண செய்திகளைக்  கேட்கும்போது
ஒவ்வொரு உயிரின் மதிப்பை உணர்த்துங்கள்.
                                                                                       
                                         இறுதியாக நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு பொருள் யாது என்பதை, இந்த கொரோனா வைரஸை மிகச்சிறந்த உதாரணமாக கூறுவோம்.தனிமனிதனுக்கு ஒரு நோய் என்றால் அவன் வசதிக்கேற்ப அதை குணப்படுத்தலாம்.உள்ளூரிலோ அல்லது வெளியூரிலோ சிகிச்சைப்  பெற்றுக்கொள்ளலாம்.ஆனால் தற்போது நாம் எதிர்நோக்கியுள்ள கொவிட் 19 நோய் உலகத்தையே புரட்டிப்போடுது.மனதளவில் எப்படி நம்மை நாம் ஆறுதல் படுத்திக்கொள்வது,இறைவழிபாடு ,பிரார்த்தனைகள் இதில் எந்த அளவு நம்மை பக்குவப்படுத்துகின்றன என்பதை அவசியம் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.பெற்றோர்களாகிய நாமும் குறைந்த பட்சம் ஒருவேளையாவது  நம்மை இறைவழிபாட்டில் ஈடுபடுத்திக்கொள்ள இந்த 'ஓய்வு நேரம் ' கிடைத்துள்ளது என்று நினைத்துக்கொள்ளவோம்.
                                                                           
                மொத்தத்தில்  ஊருடன் கூடி வாழ் என்ற வரிகளுக்கு ஏற்ப நாம் அனுபவிக்கும் தற்போதைய  நடைமுறை வாழ்க்கை ,பிணி,மூப்பு ,சாவு எப்படி அனைவருக்கும் சமமோ ?அதுபோல,உலக குடி மக்கள் அனைவரும் இன்றைய நாளில் ஏதோ ஒரு வழியில் ஒரேமாதிரியான வாழ்க்கையைத்தான் அனுபவிக்கிறோம் என்ற சமத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!அரசு ஆணையை மனதிற்கொண்டு செயல்படுங்கள்.உலகம் உனக்கு என்ன செய்தது என்று யோசிக்காமல் ,உன்னால் இந்த உலகுக்கு என்ன செய்ய முடிந்தது என்று மாத்தி யோசி!
                                                                                           


                                                             




2 comments:

  1. சிறப்பான பதிவு - தனிமை கொடுமையான விஷயம் - தனிமையை போக்கும் வழி தெரியாதவர்களுக்கு. தனிமையில் இருக்கும் நேரத்தினை நல்ல வழியில் பயன்படுத்துவோம்.

    ReplyDelete